விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 டிசம்பர், 2021

மாண்டவர் மாண்ட வினைபெறுப - பாடல்.59 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (59)

-----------------------------

மாண்டவர் மாண்ட வினைபெறுப  வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவேயாண்டும்

பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்

துறப்பார் துறக்கத் தவர்.

 

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------

மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவேயாண்டும்

பிறப்பார் பிறப்பு ஆர் அறன் இன்புறுவர்

துறப்பார் துறக்கத்தவர்.

 

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

அறிவால் மாண்படைந்த   பெருமக்கள், அனைத்து மக்களும் உவக்கும்  வண்ணம் அறிவார்ந்த   செயல்களையே  செய்து இன்புறுவர் !

 

அறிவின்   மாண்பைப்   புறந்தள்ளி வாழ்வோர் தம்மால் வேண்டப்படாத தீயபலன்களை அடைந்து   நாளும்  துன்புறுவர்   !

 

உயர்ந்த பிறவியாம் மனிதப் பிறவியெடுத்துப்   பிறந்தவர்கள் அப்பிறப்பிற்குரிய  அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர் !

 

அதுபோல் யான், எனது என்னும் தன்னலப் பற்றைத் துறந்து பொதுநலம் பேணுவோர் வீட்டுலகப் பேற்றை எளிதில் அடைந்து இன்புறுவர் !

 

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

மாண்டவர் = அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள் ; மாண்ட வினை = மாட்சிமைப்பட்ட செயல்களை ; பெறுப = செய்யப்பெறுவர் ; வேண்டாதார் = அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் ; வேண்டா வினையும் = தம்மால் வேண்டப்படாத தீவினைப் பயன்களையும் ; பெறுப = இம்மை மறுமைகளில் பெறுவார்கள் ; யாண்டும் = எப்பொழுதும் ; பிறப்பார் = மேற்பிறப்பில் பிறப்பவர்கள் ; பிறப்பு ஆர் = அப்பிறப்பிற் பொருந்தும் ; அறன் = அறத்தையே ; இன்புறுவர் = இருமையிலும் விரும்பி இன்புறுவர் ; துறப்பார் = யான், எனது என்னும் பற்றைத் துறப்பவர்கள் ; துறக்கத்தவர் = வீட்டுலகத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

 

-----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வார்கள்; அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள், தீவினைப் பயன்களையும் பெறுவார்கள்; உயர்ந்த பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பின் அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர்; பற்றைத் துறப்பவர்கள் வீட்டின்பத்துக்கு உரியர் ஆவார்கள்.

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக