விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (60)
--------------------------------
என்று முளவாகு நாளும் இருசுடரும்
என்றும் பிணியுந் தொழிலொக்கும் – என்றும்
கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ்
சாவாரும் என்றும் உளர்.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------
என்றும் உளவாகும் நாளும், இரு சுடரும்;
என்றும் பிணியும் தொழிலும் ஒக்கும்; - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-------------------
இந்தப் பேரண்டத்தில் விண்மீன்களும் திங்களும் கதிரவனும் எக்காலத்திலும்
இருக்கவே செய்கின்றன !
மனிதனின் செயல்களை முடக்கிப் போடும் நோயும், அவன்
செய்யும் தொழில்களும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன !
இல்லையென்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் ஈவோரும், அவற்றைப்
பெறுவோரும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர் !
அதுபோல், இந்த உலகத்தில் புதிதாகப் பிறப்பவர்களும் இறப்பவர்களும் எக்காலத்திலும்
இருக்கவே செய்கின்றனர் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
என்றும் = எக்காலத்தும் ; நாளும் = விண்மீன்களும் ; இருசுடரும் = திங்களும்
சூரியனும் ; உளவாகும் = உள்ளனவாகும் ; என்றும் = எக்காலத்திலும் ; பிணியும் = செயலுக்கு
இடையூறான நோயும் ; தொழில் = உழவு முதலிய தொழில்களும் ; ஒக்கும் = உள்ளன
ஆகும் ; என்றும் = எக்காலத்திலும் ; கொடுப்பாரும் = இல்லை
என்னாமல் ஈவாரும் ; கொள்வாரும் = ஏற்பாரும் ; அன்னர் = உளராவர் ; என்றும் = எக்காலத்திலும் ; பிறப்பாரும் = பிறப்பவர்களும் ; சாவாரும் = இறக்கின்றவர்களும் ; உளர் = உளராவார்.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
விண்மீன்களும் திங்களும் சூரியனும் என்றும் உள்ளன; நோயும்
முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் ; பிறப்பாரும்
இறப்பாரும் என்றும் உளர் !
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),15]
{01-12-2021}
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக