விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 டிசம்பர், 2021

நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் - பாடல்.63 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (63)

-------------------------------

நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல், சேர்ந்து

வழுத்த வரங்கொடுப்பர் நாகர்தொழுத்திறந்து

கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி

நன்றூட்ட நந்தும் விருந்து.

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------

நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல்; சேர்ந்து

வழுத்த வரம் கொடுப்பர் நாகர்; – தொழுத் திறந்து

கன்று ஊட்ட நந்தும் கறவை; கலம் பரப்பி

நன்று ஊட்ட நந்தும் விருந்து.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

வேள்வித் தீயில் உருக்கிய நெய்யைச் சொரியச் சொரியத் தான் அந்த தீயின் சுடர் மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும் !

நாகர்கள் எனப்படும் தேவர்களை வாழ்த்த வாழ்த்தத் தான் அவர்கள் வாழ்த்துவோருக்குச் செய்யும்  நன்மைகள் பெருகும் !

கன்றினைத் தாயிடம் விடுகையில், அது ஓடிவந்து மடியில் முட்டி முட்டிக் குடிக்கையில் தான் மேலும் மேலும் பால் சுரக்கும் !

அதுபோல், தலைவாழை இலையிட்டு அன்புடன் உணவை அள்ளி அள்ளிப்  பரிமாறுகையில் தான் விருந்தினரிடம்  மகிழ்ச்சி பெருகும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

நெருப்பு அழல் = வேள்வித் தீயின் சுடர் ; நெய் விதிர்ப்ப = நெய்யைச் சிந்த ; நந்தும் =  ஓங்கும் ; நாகர் = தேவர்கள் ; சேர்ந்து வழுத்த = தம்மைப் பிறர் அணுகி ஏத்த ; வரம் கொடுப்பர் = வேண்டும் நன்மைளை அளிப்பர் ; கறவை = ஆக்கள் ; தொழுத் திறந்து = கொட்டிலைத் திறந்து ; கன்று ஊட்ட = கன்றுகளை உண்பிக்க ; நந்தும் = பால் பெருக்கெடுக்கும் ; கலம் பரப்பி = இலையை விரித்து ; நன்று ஊட்ட = இனிமையாக உண்பிக்க ; விருந்து நந்தும் = விருந்தினர் மனம் களிப்பர்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

நெய்யைச் சொரிய அழல் வளர்ந்து எரியும் ; தம்மை வழுத்தினால் தேவர் நன்மை தருவர் ; கன்றை உண்பிக்க ஆன் பால் பெருகும் ; இனிமையாய் விருந்தளிக்க, விருந்தினர் மகிழ்வர்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),16]

{02-12-2021}

------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக