விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் இயற்றிய நூல் நான்மணிக்கடிகை. இதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (64)
------------------------------
பழியின்மை மக்களாற் காண்க வொருவன்
கெழியின்மை கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற்
போற்றாதார் போற்றப் படும்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------
பழி இன்மை மக்களால் காண்க ; ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக ; பொருளின்
நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக ; புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப்படும்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------------
பிறரால் பழிக்கப்படாத வாழ்வை ஒருவன் வாழ்கிறான் என்பதை அவனது மக்கள் செல்வங்களின் தகுதியையும் ஒழுக்கத்தையும் வைத்து அறியலாம் !
நண்பர்களே கிடையாது என்னும் நிலையை ஒருவன் அடைகிறான் என்பதை, அவனிடம்
இருக்கும் செல்வங்கள் அழியத் தொடங்குவதிலிருந்து அறிந்து கொள்ளலாம் !
ஒருவன் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கிறான் என்பதை
அவனிடம் செல்வம் மேலும்
மேலும் பெருகிக் கொண்டிருப்பதை வைத்து அறியலாம் !
அதுபோல், ஒருவன் புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறான் என்பதை, அவனது பகைவர்களும் அவனை வணங்குவதை வைத்து அறியலாம் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
பழி இன்மை = ஒருவன் தான் பழிக்கப்படுதல்
இல்லாமையை ; மக்களாற் காண்க = தன் மக்கட்
பேற்றால் கண்டு கொள்க ; ஒருவன் கெழியின்மை = ஒருவன்
தனக்கு நட்புரிமை இல்லாமையை ; கேட்டால் அறிக = தனக்குச் செல்வம் கெடுதலால்
கண்டுகொள்க ; பொருளின் நிகழ்ச்சியால் = பொருள்
வரவினால் ; ஆக்கம் அறிக = ஒருவன் தனது வளர்ச்சியைக்
கண்டு கொள்க ; புகழ்ச்சியால் = தான் பலரானும் புகழப்படும்
புகழ்ச்சியினால் ; போற்றாதார் = பகைவராலும் ; போற்றப்படும் = ஒருவன்
வணங்கப்படுவான்.
------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினால் பழிக்கப்படுதல் இல்லாதவன்
ஆவான் ; நட்பு இயல்பு உடையவனானால் அவனுக்குப் பொருட் கேடு உண்டாகாது ; ஒருவனுக்குச்
செல்வம் மேலும் மேலும் பெருகிக்கொண்டு இருக்குமானால் அதனால் அவனது முற்போக்கு உண்மை அறியப்படும் ; பலரும்
புகழும்படி ஒருவன் ஒழுகுவானாயின் அப்பெரும் புகழினால் பகைவரும் அவனை வணங்குவர்.
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக் கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),17]
{03-12-2021}
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக