விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (74)
---------------------------------
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை யானே நடந்தன – தாழியாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலா லின்புறு வார்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன ; யாமமும்
நாழிகை யானே நடந்தன – தாழியாத்
தெற்று என்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கு என்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
ஊழி என்று சொல்லப்படும் காலமுறைமை, நம் முன்னோர்களால், இத்தனை ஆண்டுகள் என்று எண்ணி, வரையறுக்கப் பட்டிருக்கிறது !
யாமம் என்று சொல்லப்படும் வேளைமுறைமையும் இத்தனை நாழிகைகள் என்று எண்ணி நம் முன்னோர்களால் வரையறுக்கப் பட்டிருக்கிறது !
ஊழிகளாகவும் நாழிகையாகவும் காலம் விரைவாகக் கழிந்து போவதை
உணரும் அறிவுடையோர், அறிஞர்களை
அணுகிக்கற்று அறிவுத்தெளிவு அடைகின்றனர் !
ஆனால், அறிவில்லாதோர், காலம் விரைவாகக் கழிகிறது
என்பதைக் கருதாமல் பிறர் மீது கடுஞ்சொற்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து காலத்தைக் கழிக்கின்றனர் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
ஊழியும் = ஊழிக்காலமும் ; யாண்டு எண்ணி = ஆண்டுகளால்
எண்ணி ; யாத்தன = அளவு செய்யப்பட்டன ; யாமமும் = யாமக்
காலமும் ; நாழிகையானே = நாழிகைகளால் ; நடந்தன = அளவு
செய்யப்பட்டுக் கழிந்தன ; தாழியா = காலந் தாழாமல் ; தெற்றென்றார் கண்ணே = தெளிந்தவர் இடத்தில் ; தெளிந்தனர் = அறிவுடையார்
எல்லாம் ஐயம் தெளிந்தனர் ; வெட்கென்றார் = அறிவிலாதார் ; வெம்
சொலால் = பிறரைக் கொடுமை கூறும் வெவ்விய சொற்களாலேயே ; இன்புறுவர் = சொல்லிச்
சொல்லி இன்புறுவார்கள்.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
ஊழிகள் யாண்டுகளாற் கணக்கெண்ணி அளவு செய்யப்பட்டுக் கழிந்தன ; யாமமும்
நாழிகையால் வரையறுக்கப்பட்டுக் கழிந்தன ; அறிஞர் தெளிந்தார் மாட்டுக்
காலந் தாழாமல் ஐயந் தெளிந்தனர் ; அறியாதார் பிறரை வெஞ்சொற் கூறி மகிழ்ந்தனர்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),26]
{12-12-2021}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக