விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (75)
-------------------------------
கற்றான் தளரின் எழுந்திருக்குங் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யாவித் தாகி விடும்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும்; எல்லாம்
ஒருமை தான் செய்த கருவி தெரிவு எண்ணின்
பொய்யா வித்து ஆகிவிடும்.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
கல்வியறிவு பெற்றுத் தேர்ந்த ஒருவன் தன் முயற்சியில் தோல்வியடைந்து
மனம் தளர்ச்சியுற்றால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் உறுதியாக முடியும் !
அறிவில்லாத முட்டாள் தன் முயற்சியில் தோல்வியடைந்து மனம்
நொறுங்கி விட்டால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் முடியவே முடியாது !
ஒரு பிறவியில் மனிதன் செய்கின்ற நல்வினை தீவினை எல்லாம், மறுபிறவியில்
அவனது இன்ப துன்பங்களுக்குக் காரணங்களாக அமையும் !
ஆராய்ந்து பார்த்தால், மனிதனாகப் பிறந்திருப்பதன் பயனை உணர்ந்து அறவழியில் வாழ்க்கையைச் செலுத்தினால், அதுவே
வீடுபேற்றுக்குக் காரணமாக
அமையும் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
கற்றான் தளரின் = கல்வியறிவு
உடையவன் ஒன்றில் இழுக்கல் உறுவானாயின் ; எழுந்திருக்கும் = அவன்
எப்படியாயினும் உய்தி பெறுவான் ; கல்லாத பேதையான் = படிக்காத
அறிவிலான் ; வீழ்வானேல் = இடையில் தளருவானாயின் ; கால்
முரியும் = முயற்சி கெட்டு அழிவான் ; ஒருமை = ஒரு பிறப்பில் ; தான்
செய்த எல்லாம் = தான் செய்தனவெல்லாம் ; கருவி = மறுபிறப்பின்
நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; எண்ணின் = ஆராயுமிடத்து ; தெரிவு = மெய்யுணர்வு ; பொய்யா
வித்து ஆகிவிடும் = வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------------
கல்வியறிவு உடையவன் தளர்வானேல் எப்படியாயினும் உய்வான் ; கல்லாத
பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான் ; எவர்க்கும்
ஒரு பிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; மெய்
உணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),26]
{13-12-2021}
----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக