விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (80)
------------------------------
சொல்லான் அறிப வொருவனை – மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை – யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை – மெய்க்கண்
மகிழான் அறிப நறா.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
சொல்லால் அறிப ஒருவனை; - மெல்லென்ற
நீரால் அறிப மடுவினை; - யார்கண்ணும்
ஒப்புரவினால் அறிப சான்றாண்மை; - மெய்க்கண்
மகிழான் அறிப நறா.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
மனிதர்களில் நல்லவர்கள் இருப்பது போல் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை
இனம் பிரித்து அறிவது எப்படி ? அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் சொற்களை வைத்தே அறிஞர்கள் அவர்களின் தன்மையை அறிந்துவிடுவார்கள் !
குளத்து நீரின் சுவை, அந்தக்குளம்
அமைந்திருக்கும் மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைகிறது. நீர்
தெளிவாக இருக்கிறதா, கலங்கலாக இருக்கிறதா, பாசி
படிந்திருக்கிறதா போன்றவற்றை வைத்து அறிஞர்கள் நீரின்சுவையைத் தெரிந்து கொள்வார்கள் !
பிறரிடத்தில் ஒருவன் பழகும் தன்மையை வைத்து - நடுநிலை
தவறா நடத்தையைக்
கணித்து - ஒற்றுமை
போற்றும் உயரிய புரிதலை வைத்து – அவனது சான்றாண்மையை அறிஞர்கள் தெரிந்துகொள்வார்கள் !
அதுபோல், ஒருவன் மது அருந்தியிருக்கிறானா என்பதை அவனது முகத்தில் வெளிப்படும்
எக்களிப்புக் குறிப்புகளையும், உடல்மொழியால்
வெளிப்படுத்தும் பேருவகை உணர்வுகளையும் வைத்து அறிஞர்கள் தெரிந்து கொள்வார்கள் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
ஒருவனை = ஒருவனுடைய நன்மை தீமைகளை ; சொல்லான் = அவன்
கூறும் சொற்களாலேயே ; அறிப = அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள் ; மடுவினை = மடுவின்
மண்ணின் இனிமையை ; மெல்லென்ற = மென்மையான ; நீரான்
அறிப = நீரினால் அறிவார்கள் ; சான்றாண்மை = ஒருவனது
பெருந்தகைமையை ; யார் கண்ணும் = யாரிடத்திலும் காட்டும் ; ஒப்புரவின் = ஒருபடியான
நன்மைத் தன்மையினால் ; அறிப = அறிவார்கள் ; நறா = கள் குடியை ; மெய்க்கண் (குடித்தானது) உடம்பின்கண் ; மகிழான்
அறிப = களிப்புக் குறிகளால் அறிவார்கள்.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
----------------------------------
ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினாலேயே அறிவார்கள் ; மடுவின்
மண்ணின் இனிமையை அதன் தெளி நீரினால் அறிவார்கள் ; பெருந்தன்மையை
யார்மாட்டும் ஒப்ப நடக்கும் நடுவு நிலையால் அறிவார்கள்; கட்குடியை
மெய்க்களிப்பால் அறிவார்கள்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக