விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (91)
---------------------------
மறையறிப வந்தண் புலவர் முறையொடு
வென்றி யறிப அரசர்கள் – என்றும்
வணங்கல் அணிகலஞ் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------
மறை அறிப அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; – என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது
அன்றி
அணங்கல் வணங்கின்று பெண்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களாகிய புலவர் பெருமக்கள் தமிழ் மறையாகிய திருக்குறள் போன்ற நூல்களைக் கற்றுத் துறை
போகிய விற்பன்னர்களாகத் திகழ்வார்கள் !
குடிமக்களை ஆளும் அறவழி நெறிமுறைகளையும், போரில்
பகைவர்களைப் புறங்கண்டு வெற்றி கொள்ளும் வழிமுறைகளையும் துல்லியமாக அறிந்து பின்பற்றுபவரே சிறந்த அரசராவார் !
பெருந்தகைமை நிறைந்தவர்களிடம் பணிவும் அடக்கமும் இயல்பாகவே நிறைந்திருக்கும் என்பதால் அவர்களுக்குப் பெருமைதரும் அணிகலன்களாக இவை இரண்டும் என்றும்
விளங்கும் !
கணவருடன் கருத்தொருமித்து இல்லறத்தை இயற்றிச் செல்லும் மனைவி, கணவரைத்தான்
உயர்வாகக் கருதுவாளேயன்றி, கடவுள் வழிகாட்டுவார் என்று கற்பனையாக நம்பித் தவறு செய்யத்
துணியாள் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
அந்தண் புலவர் = அந்தண்மையுடைய அறிஞர்கள் ; மறை அறிப = நான்மறைப்
பொருளை அறிவார்கள் ; அரசர்கள் = மன்னர்கள் ; முறையோடு = நடுவுநிலையோடு ; வென்றி = வெற்றியும் ; அறிப = அறிவார்கள் ; சான்றோர்க்கு = பெருந்
தகைமை நிறைந்தவர்களுக்கு ; என்றும் = எப்பொழுதும் ; வணங்கல் = வணங்குதலே ; அணிகலம் = அணிகலம்
போல்வதாம் ; அஃதன்றி = அதுவேயுமல்லாமல் ; அணங்கல் = கணவனை
அல்லாத வேறு தெய்வங்களை ; பெண் வணங்கின்று = பெண்மக்கள்
வணங்குதலில்லை.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
அந்தணர் மறை அறிப ; அரசர்
குடிகளை ஆளும் அறமுறையும் பகைவர்களைப் புறங்காணும் வெற்றியும் அறிப ; சான்றோர்க்கு
அணிகலம் என்றும் வணக்கம் உடையராய் இருத்தல் ; பெண்டிர்
கணவனையன்றி வேறு தெய்வம் தொழார்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக