விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

கள்ளின் இடும்பை களியறியும் - பாடல்.97 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (97)

-------------------------------

கள்ளின் இடும்பை களியறியும் நீரிடும்பை

புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை

பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை

கள்வன் அறிந்து விடும்.


----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை

புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை

பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை

கள்வன் அறிந்துவிடும்.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

குடித்துப் பழகியவனுக்கு குடிப்பதற்கு ஒருநாள் கள்  கிடைக்கவில்லையெனில் அதனால்  உண்டாகும்  துன்பத்தை, கட்குடியனே நன்கு அறிவான் !

 

மழைத்துளிகளைப் பருகி உயிர்வாழும் இயல்புடைய வானம்பாடிப் பறவை, ஒருநாள் நீர் கிடைக்கவில்லையெனில் அதனால் உண்டாகும் துன்பத்தை அப்பறவையே நன்கு அறியும் !

 

பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வறுமையால் உண்டாகும் துன்பத்தை பல மனைவியரை உடைய ஒரு கணவனே  நன்கு அறிவான் !

 

திருடிவந்த பொருள்களை யாருக்கும் தெரியாமல் மறைவாக  ஒளித்து வைப்பதற்குத் தான் எதிர்கொள்ளும் துன்பங்களைத் அத்திருடனே நன்கு அறிவான் !

 

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

கள்ளின் இடும்பை = கள்ளைப் பெறாமையால் வரும் துன்பத்தை ; களி அறியும் = கள்ளுண்டு களிப்பவன் அறிவான் ; நீர் இடும்பை = நீரைப் பெறாமையால் வரும் துன்பத்தை ; புள்ளினுள் = பறவைகளுள் ; ஓங்கல் அறியும் = வானம் பாடிப் பறவை அறியும் ; நிரப்பு இடும்பை = பொருளின்மையால் வரும் வறுமைத் துன்பத்தை ; பல் பெண்டிராளன் = மனைவியார் பலரை உடைய கணவன் ; அறியும் = அறிவான் ; கரப்பு இடும்பை = ஒன்றை ஓரிடத்தில் ஒளித்து வைப்பதிலுள்ள துன்பத்தை ; கள்வன் = திருடன் ; அறிந்துவிடும் = அறிந்துகொள்வான்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

கள் பெறாமையால் உண்டாகும் துன்பத்தைக் கட் குடியன் அறிவான் ; நீர் பெறாமையால் உண்டாகும் துன்பத்தை வானம்பாடிப் பறவை அறியும் ; பொருள் இல்லாமையால் உண்டாகும் வறுமைத் துன்பத்தை  மனைவியர் பலரை உடையவன் அறிவான் ; ஒன்றை ஒளித்து வைப்பதில் உள்ள துன்பத்தைத் திருடன் அறிவான்.

 

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),28]

{14-12-2021}

-------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக