விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

எல்லா விடத்துங் கொலைதீது - பாடல்.95 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (95)

-------------------------------

எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக்

கல்லா வளர விடல்தீதுநல்லார்

நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது

கொள்கை யழிந்தக் கடை.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

எல்லா இடத்தும் கொலைதீது; மக்களைக்

கல்லா வளர விடல்தீதுநல்லார்

நலம் தீது நாண் அற்று நிற்பின்; குலம் தீது

கொள்கை அழிந்தக்கடை.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

வேள்வியின் பெயரால் நடந்தாலும் சரி, உணவின் பெயரால் நடந்தாலும் சரி, உயிர்க் கொலை செய்தல் என்பது இரக்கமற்ற தீய செயலாகும் !

ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி, தாம்  பெற்ற பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் வளர்ப்பது  பெற்றோர் செய்யும்  தீய செயலாகும் !

பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்பான நாணம் இன்றி ஒழுகுவார்கள் எனில், அவர்களிடம் இருக்கும் அழகு, தீமை விளைவிக்கும் அழகேயாகும் !

பெருமையும் சிறப்பும் சேர்க்கும் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டால், எந்தக் குலமானாலும் சரி, அதனால் தீய பலன்களே நாட்டுக்கு விளையும் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

எல்லா இடத்தும் = எவ்வகையினும் ; கொலை தீது = ஓருயிரைக் கொலை செய்தல் தீதாகும் ; மக்களை = புதல்வரையும் புதல்வியரையும் ; கல்லா வளர விடல் = கல்வி கல்லாமல் வளரும்படி விடுதல் ; தீது = தீதாம் ; நாண் அற்று நிற்பின் = நாணம் இன்றி ஒழுகினால் ; நல்லார் நலம் தீது = பெண்களின் அழகு தீதாகும் ; கொள்கை = தக்க கொள்கைகள் ; அழிந்தக் கடை = அழிந்தவிடத்து ; குலம் தீது = குலம் தீதாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

எவ்வகையாலுங் கொலை தீதாகும் ; மக்களைக் கல்லாமல் வளரவிடுதல் தீதாம் ; நாணில்லையாயின் மகளிரின் அழகு தீதாம் ; கொள்கை அழிந்துவிட்டால் குலம் தீதாம். .

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக