விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (96)
------------------------------
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங்
கண்ணோட்ட மின்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையு மில்
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------
ஆசாரம் என்பது கல்வி; அறம்
சேர்ந்து
போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்தாள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல்.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
ஒரு மனிதனிடம் இயல்பாகவே உருவாகும் நல்லொழுக்கம் என்பது அவனது
கல்வியறிவால் அவனிடம் ஏற்படும் நற்பயனின் விளைவாகும் !
அறம் செய்தலும் இன்பம் நுகர்தலும் இணைந்து இயங்குகின்றன என்றால், அது ஒரு
மனிதன் தன் செல்வத்தை முறையாகக் கையாளுதலால்
ஏற்படும் பயனாகும் !
ஒருதலைச் சார்பாக யார்மீதும் பரிவு கொள்ளாது, ஒரு மன்னன்
தன் கடமைகளைச் செய்வானாயின் அதுவே நடுவுநிலையோடு
அரசாட்சி செய்கின்ற முறைமையாகும் !
ஒரு கருத்தைப் பற்றி அமைச்சர்களுடன் கலந்துரையாடி ஆராய்வது
மட்டுமன்றி தன் உள்ளத்தேயும் தனியாக ஆராய்வோனே சிறந்த அரசனுக்குரிய இயல்பினன் ஆவான் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
ஆசாரம் என்பது = நல்லொழுக்கம் என்பது ; கல்வி = கல்வியறிவின்
பயனாகும் ; அறம் சேர்ந்த = அறவினைகளோடு சேர்ந்த ; போகம்
உடைமை = இன்ப நுகர்ச்சி ; பொருள்
ஆட்சி = செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும் ; யார்
கண்ணும் = யாரிடத்திலும் ; கண்ணோட்டமின்மை = கண்ணோட்டமில்லாமை ; முறைமை = நடுநிலையாக
ஆளுமுறைமையாம் ; தெரிந்து ஆள்வான் = பிறரோடு
ஆராய்ந்து அரசாளுபவன் ; உள் நாட்டம்
இன்மையும் = தன்னுள்ளத்தில் ஆராயாமையும் ; இல் = இல்லை.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன் ; அறஞ்செய்தலோடு
இன்பத்தை நுகர்தல் என்பது செல்வத்தை முறையாக ஆளுதலின் பயன் ; யாரிடத்திலும்
கண்ணோட்டம் இல்லாமை நடுவுநிலையோடு அரசாளும் முறையாம் ; தான்
உளத்தேயும் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளும் இயல்பினன்.
-----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஆசாரம் என்பது தமிழ்சொல் அன்று. ஓலைச் சுவடியிலிருந்து எடுத்து எழுதுகையில் நிகழ்ந்த இடைச்செருகலாக இருக்கக் கூடும் !
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),28]
{14-12-2021}
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக